வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க சிறப்பு குழு அமைப்பு-கோவையில் வனத்துறை அமைச்சர் பேட்டி

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சிறுகுன்றா பகுதியில் கடந்த 21ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில்ஓரான் (26) என்ற தொழிலாளியை தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது. இதில், அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறுத்தை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ், அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது: வால்பாறையில் கடந்த 21-ம் தேதி தனியார் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் காலினை தாக்கியது. இதையடுத்து, அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அன்றைய தினமே மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறுத்தை தாக்கியதில் அவரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் முதற்கட்டமாக ரூ.4 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தவிர, சிறுத்தை நடமாட்டம் கண்டறிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஊருக்குள் வரும் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனை மீறி வனவிலங்குகள் கால்நடைகளை தாக்கும் போது அதற்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி அமைத்தல், தொங்கும் மின்வேலி, கம்பி மின்வேலி அமைத்தல், செயற்கை நுண்ணறிவு கருவிகள் போன்ற தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தீவனங்கள் தேவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் வனவிலங்கு பாதிப்புக்கு என நிவாரணம் அளிக்க தனியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் அதன் வலசை பாதைகள் நிர்ணயிக்கும் பணிகள் நடந்து வருகிறது. யானைகளை பாதுகாக்க தனி கவனம் எடுத்து வருகிறோம். மேலும், வனத்துறை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோதமான எவ்வித நிகழ்வையும் வனத்துறை ஆதரிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க சிறப்பு குழு அமைப்பு-கோவையில் வனத்துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: