சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் சோதனை ஓட்டம்: பயணிகள் எண்ணிக்கை 30 மில்லியனாக உயர்வு

சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முதல் பேஸ், 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 108 குடியுரிமை கவுன்டர்கள், 100, பயணிகள் பாதுகாப்பு கவுன்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் 6 கன்வயர் பெல்ட்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், நேற்று முதல், சோதனை ஓட்டம் மூலம் செயல்பாட்டிற்கு வந்தது. புதிய முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி திறந்து வைத்தார். இதனால், சென்னையில் இருந்து பயணிப்போரின் எண்ணிக்கை 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இந்த புதிய முனையத்தில் அதிகபட்ச வசதிகள் செய்யப்பட்டிருப்பதால், பயணிகள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், நேற்று முதல் தொடங்கியது. நேற்று பகல் 12:55 மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து, 146 பயணிகளுடன் சென்னை வந்த, யூ எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. புதிய முனையத்தில் தரையரங்கிய விமானத்திலிருந்து, பயணிகள் உற்சாகத்துடன் வெளியே வந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏரோ பிரிட்ஜ் பாலம் வழியாக, புதிய முனையத்தின் வருகை பகுதிக்கு வந்தனர்.

அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு, புதிய முனையத்திலிருந்து, டாக்காவிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 158 பயணிகள் பயணித்தனர். புதிய முனையத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த புறப்பாடு பகுதிக்கு, நேற்று பகல் 12 மணிக்கு முன்னதாக வேபயணிகள் வரத் தொடங்கி விட்டனர். சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737,738 விமானங்கள் மட்டுமே, இம்மாதம் முழுவதும் சோதனை அடிப்படையில் இங்கு வந்து செல்லும்.

சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில், வருகின்ற மே மாதத்தில் இருந்து, இந்த புதிய முனையத்தில், பெரிய மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும். அத்துடன் புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக டூட்டி ப்ரீ ஷாப், உணவு கடைகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டு, அவைகளும் நேற்றிலிருந்து, இந்த புதிய முனையத்தில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சர்வதேச புதிய முனையத்தில் நேற்று பயணித்த வருகை, புறப்பாடு பயணிகளுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பூக்களை கொடுத்து வரவேற்று அனுப்பினர்.

The post சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் சோதனை ஓட்டம்: பயணிகள் எண்ணிக்கை 30 மில்லியனாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: