மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் அவசியம்-உலக புத்தக தின விழாவில் வலியுறுத்தல்

ஊட்டி : உலக புத்தக தினத்தை முன்னிட்டி கோத்தகிரியில் கடக்கோடு தனியார் பள்ளியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆண்டு தோறும் உலக புகழ் பெற்ற ஆங்கில நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பாக கோத்தகிரி கடக்கோடு கிராம தனியார் பள்ளியில் புத்தகம் வாசிப்பு முகாம் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் புத்தக வாசிப்பை மேற்கொண்டு மேற்கொண்டனர். பிறகு ஒவ்வொருவரும் தங்களது வாசிப்பு அனுபவத்தையும் புத்தகத்தின் முக்கிய கருத்து குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கிற்கு பள்ளி முதல்வர் அர்ச்சுனன் தலைமை வகித்தார்.

பள்ளி தாளாளரும் கோத்தகிரி வாசகர் வட்டத்தின் செயலருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பள்ளி மேலாளர் நஞ்சன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு கருத்தாளராக கலந்துக்கொண்ட அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ பேசுகையில், அமெரிக்காவில் ஒவ்வொரு பள்ளி மாணவரும் ஆறாம் வகுப்பிற்கு வருவதற்குள் 20 புத்தகங்கள் படிக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மாணவர்கள் சில நூறு பக்கங்களை கூட படிப்பதில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது. அதுவும் பாடப்புத்தகங்கள் தான். புத்தகங்கள் மனித மனத்தை மென்மையாக்குகிறது.

உலக புகழ்பெற்ற விஞ்ஞானிகள் நியூட்டன் எழுதிய பிரின்சிபியா மேத்தமேடிக்கா, சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் போன்ற பல புத்தகங்கள் உலக வரலாற்றையே மாற்றியுள்ளன. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற ஒரு சிறிய புத்தகம் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை புரட்டி போட்டது. பெரும்பாலான மக்கள் தம் பிள்ளைகள் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படித்து நேரத்தை வீணடிக்க கூடாது என்று நினைக்கிறார்கள்.

பாடப்புத்தகங்கள் அறிவுலகத்திற்கு ஒரு நுழைவாயில் மட்டுமே. பிற புத்தகங்கள் தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும். ஒரு மாணவர் கற்ற பொது அறிவுதான் வேலைவாய்ப்பை வழங்குகிறது. வெறும் மதிப்பெண்களால் பலன் இல்லை. எனவே, மாணவர்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். முன்னதாக ஆசிரியை பிருந்தா வரவேற்றார்.
முடிவில் அனுஷ்யா நன்றி கூறினார்.

The post மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கம் அவசியம்-உலக புத்தக தின விழாவில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: