திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, பந்தக்கால் முகூர்த்தத்துடன் நேற்று விமரிசையாக தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் சிறப்புக்குரியது. அதன்படி, சித்திரை வசத்த உற்சவம் வரும் நேற்று விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நேற்று சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்த்து, மாலை 4.45 மணியளவில் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து, இன்று (25ம் தேதி) முதல் வரும் 4ம் தேதி வரை தினமும் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும். தினமும் இரவு நேரத்தில் சுவாமிக்கு மண்டகபடியும் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்று இரவு கோபால விநாயகர் கோயிலில் மண்டகபடியும் நடைபெறும். அதோடு, அன்று நள்ளிரவு 12 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறும். சிவாலயங்களில் மன்மத தகனம் நடைபெறும் தனிச்சிறப்பு அண்ணாமலையார் கோயிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: