புத்தக வெளியீட்டு விழா

திருப்போரூர்: உலக புத்தக தினத்தையொட்டி, திருப்போரூர் தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பு, கவிமுரசு பாரதி பேரவை, இந்துஸ்தான் பல்கலை கழகம் ஆகியவற்றின் சார்பில், முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள், சித்திரை திருநாள் மற்றும் 3 புத்தகங்கள் வெளியீட்டு ஆகிய விழாக்களை மையமாக வைத்து நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ் முற்றம் அமைப்பின் தலைவர் புலவர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் விஸ்வநாதன், லட்சுமி, தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியில், முனைவர் பழனியப்பன் எழுதிய `மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின்’, கவிஞர் குருநாதன் எழுதிய `இதனால் அறிவது யாதெனில்’, கவிஞர் சந்திரிகா சுரேஷ் எழுதிய `சூழ்நிலைகள் சுமத்தியவை’ ஆகிய மூன்று புத்தகங்களை சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் நளினி வெளியிட்டு பேசினார். கவிஞர் சுபத்ரா திவாகரன் தொகுத்து வழங்கினார்.

இதில், கவிமுரசு பாரதி பேரவை தலைவர் குமார், தமிழ்க்கலை அறிவியல் மன்ற தலைவர் பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் வளர்மதி ஆகியோர் புத்தகங்களை பெற்றுக் கொண்டு வாழ்த்தி பேசினர். எழுத்தாளர் சமரன், கவிஞர் உதயா ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், தமிழ் முற்றம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் நன்றி கூறினார்.

The post புத்தக வெளியீட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: