எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக பொருளாளர் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மண்டல பொறுப்பாளருமான திருச்சி ஆர்.மனோகரன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது அவருக்காக அங்கு இரவு பகல் பாராமல் பணியாற்றிய மனோகரனுக்கு அரசு கொறடா பதவி கொடுத்து அழகு பார்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக மூன்றாக பிரிந்தது. அதில் டிடிவி தினகரன் கட்சியில் திருச்சி ஆர்.மனோகரன் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு பல்வேறு பதவிகளை டிடிவி தினகரன் வழங்கினார். மேலும் அமமுக சார்பில் திருச்சியில் கடந்த 2021ம் ஆண்டு போட்டியிட்டார்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுக பொருளாளரும் திருச்சி மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார். அவருடன் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ்குமார், மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல் ரகுமான், அந்தநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் சாத்தனூர் பி.வாசு உள்ளிட்ட நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து இருந்து விலகி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

The post எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக பொருளாளர் அதிமுகவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: