கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொடியேற்றம்

கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா, கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழக-கேரள எல்லையான பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கேரள மாநிலம் குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதை உள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிமீ தூரத்துக்கு நடைபாதையும் உள்ளது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் திருவிழா நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, பத்து நாட்களுக்கு முன்பு பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் கொடிமரம் நட்டு, கண்ணகி கொடியேற்றி பூஜை செய்து பக்தர்கள் மாலையணிந்து காப்புகட்டுவர். தொடர்ந்து பக்தர்கள் விரதமிருந்து கண்ணகி கோயிலுக்குச் சென்று வழிபடுவர். இந்தாண்டு திருவிழா வரும் மே 5ல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு பளியன்குடியில் கண்ணகி அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை தலைவர் இராஜேந்தின் தலைமையில் இன்று கொடியேற்றம் நடந்தது.

விழாவையொட்டி பச்சை மூங்கிலில் கொடிமரம் தயார் செய்து, அதற்கு பூஜை செய்து, அதில் கண்ணகியின் உருவம் பொறித்த மஞ்சள் கொடியேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து காப்புகட்டுதல் மற்றும் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: