மு.க.ஸ்டாலினின் மக்கள் பணிக்கு முதல்வரின் வரலாற்று கண்காட்சி சாட்சி: நடிகர் பிரபு பேட்டி

திருச்சி: திருச்சி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டமாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” தமிழ்நாடு முதல்வரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், ராஜேந்திரன் நடிகர் ஜோமல்லூரி உள்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை வரிசைப்படுத்தி 400க்கும் அதிகமான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நம் விடியல் என்ற திட்டத்தின் கீழ் ஸ்டாலின் சைக்கிளில் பேரணி சென்ற சிலை, மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் அவரை போலீசார் தாக்குவது போன்ற காட்சி தத்ரூபமாக இடம்பெற்றிருந்தது.

பின்னர் நடிகர் பிரபு அளித்த பேட்டி: நான் சிறுவயது முதல் தளபதி மு.க.ஸ்டாலினோடு பழகி வருகிறேன். அவருடைய கடின உழைப்பு என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். படிப்படியாக உயர்ந்து இன்று முதல்வர் என்ற இந்த இடத்திற்கு வந்துள்ளார். இந்த புகைப்பட கண்காட்சியில் அவர் கட்சிக்காக செய்த பணியும், அதனால் அவர் இளைஞர் அணி தலைவராகவும், மேயராகவும் இன்று முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதேபோல் அவர் மக்களுக்காக எவ்வளவு பணி மற்றும் தியாகங்களை செய்துள்ளார்.

இந்த கண்காட்சியே அதற்கு சான்றாக உள்ளது. திருச்சி என்பது நம்ம ஊரு என எங்க அய்யா கூறுவார். அன்பில் தர்மலிங்கத்தோடு நான் இங்கு வாழ்ந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன் திருச்சியில் இருக்கக்கூடிய இடத்தில் அநேக தெருக்கள் எனக்கு பரிச்சயமானது. நான் மாட்டு வண்டியில் ஊரை சுற்றிய பகுதிகள் தான் இதெல்லாம்.

எனக்கு இந்த ஊரில் நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். எங்க ஐயா சொல்வது உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ.. அதற்கு இணையாக நண்பர்களும் முக்கியம் என்று கூறுவார். எங்கள் அண்ணன் மு.க.ஸ்டாலின் இன்று எப்படி தமிழக மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வருகிறாரோ, அதேபோல் இனிவரும் கூடிய காலங்களிலும் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அவருடைய உடல் நலம் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்றார். இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

The post மு.க.ஸ்டாலினின் மக்கள் பணிக்கு முதல்வரின் வரலாற்று கண்காட்சி சாட்சி: நடிகர் பிரபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: