வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு

நாகர்கோவில்: நாகர்கோவில் ஒழுகினசேரி திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில், வடக்கு பகுதி பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் தலைமை வகித்தார். மாநகர ெசயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் பன்னீர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசியதாவது: 2019ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றியை பெற்றதுடன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இது ஸ்டாலின் நிர்வாக திறமைக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் மக்கள் அளித்த வெகுமதி. இந்த வெற்றி பாதை இனிவரும் காலங்களிலும் தொடரும். திமுகவில் முன்பு வட்ட செயலாளர் பதவிக்கு வருவது கூட மிகவும் சிரமம். அதற்காக அவர்கள் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். தற்போது சிலருக்கு எளிதாக அந்த பதவி கிடைத்துள்ளதால், அதன் அருமை தெரியாமல் உள்ளனர்.

கட்சிக்காக உழைக்காமல் உள்ளனர். திமுக சார்பில் போராட்டம், பொதுக்கூட்டம் என்று அழைத்தால் தான் 5 பேரை அழைத்து வருவருவதாக கூறிவிட்டு, அவர்கள் மட்டும் தனியாக வருகின்றனர். இது சரியல்ல. கட்சி தலைமை மக்களுடனும், தொண்டர்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. நீங்கள் கட்சிக்காக உழைத்தால் கேட்காமலேயே உங்களுக்கு கட்சியில் மட்டுமின்றி மக்கள் பிரிதிநிதி பதவிகளும் உங்களை தேடி வரும். ஏழை மக்கள், பெண்கள், மாணவிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், ஜாதி மத வேறுபாடின்றி நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்து கொண்டுள்ளார். அவரது வழியில் உதயநிதி ஸ்டாலினும் 24 மணி நேரமும் மக்கள் பணியாற்றி வருகிறார். செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரை துணை முதல்வராக நியமிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தொமுச சிதம்பரம், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநகர இளைஞரணியை சேர்ந்த சிடி சுரேஷ், மணிகண்டன், சேக் மீரான், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post வடக்கு மண்டல திமுக உறுப்பினர் கூட்டம்; கட்சிக்கு உண்மையாக உழைத்தால் பதவி தேடி வரும்: மேயர் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: