கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்து மணல், ஜல்லி தயாரிக்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பை அளவை குறைக்க மாநகராட்சி பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அதன்படி, குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவற்றை உரம் தயாரிக்க பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் அமைந்துள்ள குப்பை கிடங்குகளில் மலை போல் குவிந்துள்ள குப்பை, கழிவுகளை மறு சுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என அனைத்தையும் தரம் பிரித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னையில் ஆங்காங்கே சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட கட்டிட கழிவுகள் ‘மாஸ் கிளீனிங்’ என்ற திட்டம் மூலம் அகற்றப்பட்டு, இந்த கிடங்குகளில் கொட்டப்பட்டது.இந்த கட்டிட கழிவுகளை ராட்சத இயந்திரங்கள் கொண்டு பொடியாக்கி அதில் இருந்து 20-12-6 ஆகிய அளவுகளில் ஜல்லிகளும், 2 விதமான மணல்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த பணிகள் முழுவதும் முடிந்து, அதன் சோதனை திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் கிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.இதுபற்றி மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் கிங் பேடி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ சென்னையில் உள்ள கட்டிட கழிவுகள் அனைத்தையும் அகற்றி அதை குப்பை கிடங்குகளில் கொட்டி, தரம் பிரித்து கட்டிட கழிவுகளில் இருந்து மணல் மற்றும் ஜல்லி தயாரிக்கப்படுகின்றன.  சென்னையில் இதற்காக இரண்டு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன சுமார் ரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலைகளில் இருந்து கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் ஜல்லி கற்கள் மற்றும் மணல் தயாரிக்கப்படுகின்றன சென்னையில் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் முதற்கட்டமாக இந்த சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளன. தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் நடக்கிறது,’’ என்றார்.பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, பகுதி செயலாளர் முருகன், வட்ட செயலாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்து மணல், ஜல்லி தயாரிக்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: