சிறுபான்மையினர் நலன் காப்பது திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர், எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரமலான் பெருநாளை முன்னிட்டு 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: அன்பு, இரக்கம், ஈகை ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இஸ்லாமிய பெருமக்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர்ஆட்சியில் 1969ல், மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறையை அறிவித்தார். அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி அதனை ரத்து செய்தது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, ரத்து செய்ததை ரத்து செய்து மீண்டும் மீலாதுநபிக்கு அரசு விடுமுறையை ஏற்படுத்தித் தந்தார்.

உருது பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; “சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதிலிருந்து 2400 வரை உயர்த்தியது, வக்பு வாரிய சொத்துகளைப் பராமரிப்பதற்காக முதன்முறையாக ரூ. 40 லட்சம் மானியம் வழங்கியது, ஹஜ் பயணத்திற்குக் குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கக்கூடிய அனைவருக்கும் அந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய அனுமதியை வழங்கியது.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அமைத்தது, இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, “உருது அகாடமி” தொடங்கியது. 2001ல் சென்னையில் “காயிதே மில்லத் மணிமண்டபம்” அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டி பின்னர் கட்டிமுடித்திட ஆவன செய்து கொடுத்தது. 2007ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது.

அரசுக் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்ப்புகளில் அதற்குரிய இடங்களைப் பெறக்கூடிய வகையில் அதை உருவாக்கித் தந்திருக்கிறோம். சிறுபான்மை நலன் காப்பதை திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உறுதி எடுத்துக் கொண்டு நாம் நடைபோட்டு வருகிறோம். சிறுபான்மை இன மக்களின் அரணாகத் திகழக்கூடிய திராவிட மாடல் அரசும் என்றென்றும் இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு காக்கக்கூடிய இந்த நன்னாளில் உங்களைல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்றென்றும் உங்கள் வாழ்வில், இன்பமும், அன்பும், கருணையும், வளமும் பொங்கிச் செழிக்கட்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், பகுதிக் கழகச் செயலாளர்கள் நாகராஜன், ஐசிஎப் முரளி, துணை மேயர் மகேஷ்குமார், சிறப்பு விருந்தினர்களான மயிலம் ஆதினம், ஜனாப் ஹமீல் ஷேக் சபீர்,பிலிக்ஸ் ராஜாமணி, அருட்சகோதரி அமலா ரஜினி பிரகாஷ் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சிறுபான்மையினர் நலன் காப்பது திராவிட மாடல் ஆட்சியின் முக்கிய அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: