நெல்லை மாவட்டத்தில் மிக பெரிய குடவறை கோயிலான வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்-பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

வள்ளியூர் : வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். மிகப்பெரிய குடவறைக் கோயிலாக
உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சரியாக நேற்று காலை 8 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. தொடர்ந்து பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து இரவு மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. இரவில் சுவாமி-அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான 9ம் திருவிழாவை முன்னிட்டு வருகிற 28ம் தேதி ேதரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளுகின்றார். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 10ம் திருவிழாவில் காலை 7 மணிக்கு சுவாமி-அம்பாளுடன் வேத சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தீர்த்தவாரி, கும்ப அபிஷேகம் நடக்கிறது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post நெல்லை மாவட்டத்தில் மிக பெரிய குடவறை கோயிலான வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்-பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: