சென்னை: சென்னை மாநகரில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் இரவு நேரங்களில் அண்ணாசாலை, காமராஜர் சாலை என முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவு அண்ணாசாலையில் பைக் ரேஸ் நடக்க உள்ளதாக போக்குவரத்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போக்குவரத்து போலீசார் அண்ணாசாலையில் ஸ்பென்சர் சிக்னல், அண்ணா சாலை ஜிபி ரோடு சந்திப்பில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மின்னல் வேகத்தில் 10க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த பைக்குகளில் 20க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணியாமல் சீறி பாய்ந்து வந்தனர். அதேநேரம் பைக்கில் மாற்றி அமைக்கப்பட்ட சைலன்சர்களால் அதிக ஒலியுடன் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதை கவனித்த போலீசார் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து பைக் ரேசில் ஈடுபட்ட அனைவரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் போலீசாரை திசை திருப்பும் வகையில் பைக்கில் சாலையிலேயே அபாயகரமாக சாகசங்கள் செய்து, போலீசாரிடம் சிக்காமல் தப்பி சென்றனர்.
இருந்தாலும், போலீசாரின் தீவிர நடவடிக்கையால் சுற்றி வளைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோரை மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது அதிகவேகமாக வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 16 விலை உயர்ந்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post அண்ணாசாலையில் நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்டவர்களின் விலை உயர்ந்த 16 வாகனங்கள் பறிமுதல்: போலீசாரின் தடையை மீறி சீறிப்பாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.
