திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என பக்தர்கள் புகார் கூறுகின்றனர். திருவாடானை அருகே திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் கோயிலில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ஆடி மற்றும் சித்திரை மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி கும்பிட வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை.

இங்கு ஊராட்சி சார்பில் 2 சிறிய கழிப்பறைகள் கட்டப்பட்டு பயனற்றுக் கிடக்கிறது. தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பக்தர்கள் அச்சத்துடன்தான் அங்கு செல்கின்றனர். சிலர் கோயில் அருகிலேயே சிறுநீர் கழித்து விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பயனற்று கிடக்கும் ஊராட்சி கழிப்பறையை திறக்கவேண்டும். மேலும் சுகாதார வளாகமாக கூடுதல் கழிப்பறைகளை கட்ட வேண்டும். அப்போதுதான் வாரத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் இந்த ஊருக்கு போதுமானதாக இருக்கும்.

எனவே சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என பொதுமக்களும் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர். மேலும் இங்கு உள்ள கிராம மக்களுக்கு குடிதண்ணீர் போதிய அளவில் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு உவர் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கிணற்றில் தேவையான தண்ணீர் இல்லாத காரணத்தால் அது முடங்கிக் கிடக்கிறது. தேவஸ்தானம் சார்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் வசதி சரி வர செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இங்கு வரும் பக்தர்கள் தண்ணீர் தேடி அலைவது பரிதாபமாக உள்ளது. எனவே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிரந்தர குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

கோயில் வீதி எங்கும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. நான்கு வீதிகளிலும் குப்பைத் தொட்டிகளை நிறுவ வேண்டும். இங்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் குப்பைகளை வீதியிலேயே கொட்டி விடுகின்றனர். மேலும் குறைவான அளவில் பணியாளர்கள் இருப்பதால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை அருகிலேயே கொட்டி தீ வைக்கின்றனர். மேலும் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கையால் இழுக்கப்படும் வண்டிகளில் ஏற்றி செல்கின்றனர். இவற்றை இழுப்பதற்கு திறன்மிகு ஆட்கள் கிடைக்காததால் தொலைவிற்கு சென்று குப்பைகளை கொட்ட முடியவில்லை. எனவே இந்த ஊராட்சிக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டிகளை வழங்க அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

தேவஸ்தானம் சார்பில் குறைவான அறைகளே கட்டப்பட்டுள்ளன. இங்கு வருவோருக்கு இவை போதுமானதாக இல்லை. மேலும் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய தங்கும் விடுதிகள் இடிந்து போய் கிடக்கின்றன. இவற்றை அகற்றி விட்டு புதிய விடுதிகள் அமைக்க கோரியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை. இவ்விஷயத்தில் தேவஸ்தான நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலின் நான்கு வீதிகளிலும் பலர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் இங்கு வரும் வாகனங்கள் ஒன்றை ஒன்று விலகிச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் சாலை சுருங்கி விட்டது. சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டத்தில் மிகவும் சிரமப்பட்டு தேரை இழுத்துச் செல்கின்றனர்.

The post திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: