ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணையில் மின் உற்பத்தி நிறுத்தம்

ஈரோடு,ஏப்.14:ஈரோடு அடுத்த வெண்டிபாளையம் தடுப்பணையில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணை நவீனமானது. இந்த தடுப்பணை 18 மதகுகள் கொண்டது. இந்த தடுப்பணை மூலம் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெண்டிபாளையம் தடுப்பணையில் காவிரி ஆற்றில் 2,500 கன அடி நீருக்கு மேல் வந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடக்கும். இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும், குடிநீர் தேவைக்காக மட்டும் 1,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால், எங்கு பார்த்தாலும் பாறைகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வெண்டிபாளையம் தடுப்பணையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெண்டிபாளையம் தடுப்பணையின் 18 மதகுகளில் 17 மதகுகள் மூடப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பிற பகுதி குடிநீர் தேவைக்காக ஒரே ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதே மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், கோடை மாதமான மே மாதத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மின் சிக்கனத்தை கடைபிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

The post ஈரோடு வெண்டிபாளையம் தடுப்பணையில் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: