திருவொற்றியூர்: மணலி மண்டல குழு கூட்டத்தில் ரூ6 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணலி மண்டல குழு மாதாந்திரக் கூட்டம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. மக்கள் நலப் பணிகள் குறித்து கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர். அப்போது கவுன்சிலர் காசிநாதன் பேசும்போது, மாத்தூர் ஏரியை பாதுகாக்க ஏரிக் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். கவுன்சிலர் தீர்த்தி பேசும்போது, எனது வார்டு தாழ்வான பகுதி என்பதால் மழைக்காலத்திற்கு முன்பு மழைநீர் கால்வாய் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் ராஜேஷ்சேகர் பேசும்போது, கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று 3 மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன். அதை செயல்படுத்த வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் ராஜேந்திரன், ஸ்ரீதர், நந்தினி, ஜெய்சங்கர் ஆகியோர் தடை இல்லாமல் குடிநீர் விநியோகிக்க வேண்டும், குப்பைகளை அகற்ற வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்தனர். இதற்கு தலைவர் ஆறுமுகம் பதிலளித்து பேசுகையில், மாத்தூர் ஏரியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணலி மண்டலம் முழுவதும் மழைக்காலத்திற்கு முன்பு கால்வாய் பணி முடிக்கப்பட்டுவிடும். சரியாக பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரர்கள் செய்யவில்லை என்றால் அவர்களது ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீர் வரி பாக்கி உள்ளவர்களுக்கு தவணை முறையில் கட்டணத்தை செலுத்த குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சுமார் ரூ6 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு 46 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post மணலி மண்டல குழு கூட்டத்தில் ரூ6 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.
