ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சுவை மிகுந்த புளிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர்- திருவண்ணாமலை உள்ளடக்கிய ஜவ்வாதுமலை புளிக்கு ‘புவிசார் குறியீடு’ பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான ஜவ்வாது மலைத்தொடர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 260 சதுர.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். 245 குக்கிராமங்கள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் ஆரம்பித்து, திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு வரை நீண்டு, வேலூர் மாவட்டம் காட்பாடி வரையிலும் ஜவ்வாது மலைத்தொடர் பரவியுள்ளது. இம்மலை பகுதியில் அரிய வகை மூலிகை மரங்களும் மூலிகை செடிகளும் கடுக்காய், ஜாதிக்காய், தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களைப் பயிரிடுகின்றனர். ஜவ்வாது மலைப்பகுதியில் அதிகளவில் மலைத்தேன், புளி போன்ற பொருட்களும் இம்மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன.

இந்த ஜவ்வாது மலை தொடரில் உள்ள காட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான புளிய மரங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மரங்களைக் குத்தகைக்கு பெற்று புளியினைச் சேகரிக்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை மரத்தில் புளிகளை உதிர்த்து அதனை தரம் பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜவ்வாது மலை புளியானது மற்ற இடங்களில் கிடைக்கப்பெறும் புளியைக் காட்டிலும் வேறுபட்டு உள்ளது. குறிப்பாக அதன் சதைப்பகுதி, சுவை, அளவு உள்ளிட்டவை வேறுபடுகின்றன. அதனால் ஜவ்வாதுமலைப் புளிக்குச் சந்தையில் அதிக அளவு கிராக்கி உள்ளது. மலைப்பகுதியில் சேகரிக்கப்படும் புளி ஜமுனாமரத்தூர் மற்றும் ஒடுகத்தூரில் சந்தைப்படுத்தப்படுகின்றன. வருடத்தில் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை புளி அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

ஜவ்வாதுமலைக்குச் செல்லும் பயணிகள் தனி சுவையுடன் விளங்கும் இப்புளியை வாங்கிச் செல்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவியல் கணக்கெடுப்பு அலுவலரான எட்கர் தர்ஸ்டன் என்பவர் பல்வேறு இடங்களிலும் மலைகளிலும் ஆய்வு செய்து அன்றைய சென்னை மாகாணத்தின் பூர்வகுடிகளின் வாழ்வியலையும் பண்பாடுகளையும் தொகுத்து “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்” என்ற நூலினை எழுதி வெளியிட்டார். அதில் ஜவ்வாதுமலைவாழ் மக்களைக் குறித்தும் அவர்களின் பண்பாடுகளைக் குறித்தும் விவரித்துள்ளார். அவற்றில் இம்மலையில் வாழும் மக்களின் உணவு முறைகளில் இங்கு விளையும் புளியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க ஜவ்வாதுமலைப் புளிக்குப் ‘புவிசார் குறியீடு’ பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தூய நெஞ்சக் கல்லூரியின் ‘அறிவுசார் சொத்துரிமை மைய இயக்குநர்’ முனைவர் பிரிட்டோ கூறுகையில், “தமிழக அளவில் கல்லூரிகளில் ‘அறிவுசார் சொத்துரிமை மையம்’ இங்கு மட்டுமே உள்ளது.

தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் கீழ் இம்மையம் செயல்படுகின்றது. காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு உள்ளிட்ட துறைகளை கருத்தில் கொண்டு இம்மையம் செயல்படுகின்றது” என்றார். தொடர்ந்து பேசிய அறிவுசார் சொத்துரிமை மைய உறுப்பினர் முனைவர் ஆ.பிரபு “பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் மிகுந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜவ்வாதுமலையில் கிடைக்கப்பெறும் புளி, மற்றும் மலைத்தேன், சிறுதானியங்களுக்கு புவிசார் குறியீடு பெற எங்களது மையம் முயற்சிமேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு கிடைக்கப்பெற்றால் இம்மலையில் உள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரம் பெருகும். இடைத்தரகர்களின் ஆதிக்கமும் குறைந்து பொருளாதாரத்தில் இம்மக்கள் வளர்ச்சி அடைய இத்திட்டம் உதவும். இம்மலையில் உற்பத்தியாகும் பொருட்களின் மகத்துவம் அனைவரையும் சென்றடையும். விரைவில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

The post ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் சுவை மிகுந்த புளிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: