யுனானி முதுகலை பட்ட படிப்பில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் 2022-23ம் கல்வி ஆண்டில், யுனானி முதுகலை பட்ட படிப்பில், 2 பாடப் பிரிவுகள் புதியதாக தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்: தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் என்று ஒரு யுனானி மருத்துவ கல்லூரி உள்ளது. எனவே யுனானி மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பு என்பது இதற்கு முன்னர் இல்லாத நிலை இருந்து வந்தது.

யுனானியில் பட்டமேற்படிப்பு பயின்று வந்து இங்கே பேராசிரியர்களாக பணியாற்றிட முடியும் என்பது நிலை, அந்த வகையில் இங்கே இளங்கலை படித்த மாணவர்கள் பட்ட மேற்படிப்பு பயில்வதற்கு பெங்களுரு, ஹைதராபாத் போன்ற பல்வேறு நகரங்களுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை இருந்தது. ஒரு மிக நீண்ட காலமாக குறிப்பாக 15 ஆண்டுகளாக இங்கே யுனானிக்கென்று பட்ட மேற்படிப்பு பயில்வதற்கான நிலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. வாணியம்பாடியில் நிறுவப்பட்ட யுனானி கொரோனா கேர் சென்டர் மிகப்பெரிய அளவில் அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய தாய்மார்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.

முதல்வர் சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக தொடங்குவதற்கு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் மாதவரம் பால்பண்ணையில் 25 ஏக்கர் நிலம் அந்த துறையிடம் இருந்து நில மாற்றம் செய்து சித்த மருத்துவ பல்கலைக் கழகம் கட்ட ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்று தமிழ்நாட்டில் அமைப்பதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏகபோதித்த ஆதரவை மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், யுனானி மருத்துவக் கல்லூரி முதல்வர் முஸ்டாக் அகமது, இணை இயக்குநர் பார்த்திபன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post யுனானி முதுகலை பட்ட படிப்பில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: