அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா

பள்ளிபாளையம், ஏப்.12: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 7 மாணவ, மாணவிகள், தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்ல தேர்வாகி உள்ளனர். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மூலம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நுண்கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட 6 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் 150 மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்காக வெளிநாட்டு பயணத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த நிதியாண்டிற்காக போட்டிகளில், தமிழகம் முழுவதும் 150 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நேற்று வெளியிட்டுள்ளார்.

இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் வெளிநாட்டு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த சிறார் திரைப்படங்களை தயாரித்த வெங்கரை அரசு பள்ளி 6ம் வகுப்பு மாணவன் அபினேஷ்கண்ணா, சின்னமுதலைப்பட்டி 8ம் வகுப்பு மாணவி யாழினி, வானவில் மன்றம் மூலம் தேர்வான பள்ளிபாளையம் வி.மேட்டூர் 7ம் வகுப்பு மாணவி வித்யா, கொல்லிமலை வளப்பூர்நாடு 8ம் வகுப்பு மாணவி சுபிக்‌ஷா, கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிபாளையம் வேமங்காட்டு வலசு அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவன் இளவரசன், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வெண்ணந்தூர் அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவி பிரிதா பிரின்ஷி, இலக்கிய மன்ற போட்டியில் வெற்றி பெற்ற நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி 7ம் வகுப்பு மாணவி அனன்யா யாழினி ஆகியோர் கல்விச் சுற்றுலாவிற்கு வெளிநாடு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக பாஸ்போட் பெற ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தங்கள் பள்ளியின் மாணவ, மாணவிகள் வெளிநாடு செல்ல தேர்வாகி உள்ளதால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post அரசு பள்ளி மாணவர்கள் 7 பேர் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா appeared first on Dinakaran.

Related Stories: