திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கடந்த 4ம் ேததி தொடங்கியது. அதையொட்டி, அன்று காலை 10.30 மணியளவில் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதியில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு 8 மணி அளவில், கோயில் கொடிமரம் அருகே உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளளும், மாலை மாற்றும் வைபவமும் நடந்தது. பின்னர், இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவமும், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக, கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடி, நலங்கு உற்சவமும், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. விழாவின் நிறைவாக, நேற்று பகல் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. தாமரை குளம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், குளத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, குளத்தின் கரையில் உள்ள மண்டபத்தில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவாக நேற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடந்தது. அடுத்த படம்: தாமரைக் குளம் அருகே பாலிகை விடும் நிகழ்ச்சி நடந்தது.
The post பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறைவு பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.
