தமிழ்நாட்டில் 9 கிரானைட் சுரங்கங்கள் மின்மயம்: பேரவையில் அறிவிப்பு

சட்டப் பேரவையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் உள்ள சுரங்கங்கள், கனிமங்கள் துறையின் மானியக்கோரிக்கையில் விவாதம் நடந்தது.

அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

  • தமிழ்நாட்டில் படிந்துள்ள கனிமங்களின் இருப்பு, தரம், புவியமைப்பியல் ஆகியவற்றை அறியும் வகையில் கனிம ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு மாநிலக் கனிம ஆய்வு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த நிதியத்துக்கு சிறு கனிம குத்தகைதாரர்கள் செலுத்தும் உரிமைக் கட்டணத்தில 2 சதவீத தொகை நிதியாக பெறப்படும். இதை மேற்கொள்ள தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959ல் திருத்தம் மேற்கொள்ளப்படும். சிறு கனிம குத்தகைதாரர்களிடம் இருந்து பெறப்படும் 2 சதவீத உரிமைத் தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.6 கோடி வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
  • தமிழ்நாடு கனிம நிறுவனம், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராபைட் ஆலையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியை மேம்படுத்த ரூ.50 லட்சம் மதிப்பில், டீசலுக்கு பதிலாக எரிவாயுவை பயன்படுத்தி கிராபைட்டை உலர்த்தும் முறை செயல்படுத்தப்படும். இதன் மூலம் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டு எரிபொருள் செலவு 25 சதவீதம் மீதமாகும்.
  • தமிழ்நாடு கனிம நிறுவனம் சுரங்கப்பணி மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், எரிபொருள் செலவை குறைக்கவும் நிலையான சுரங்கப் பணிகளுக்கு ரூ.10 கோடி செலவில் 9 கிரானைட் சுரங்கங்கள் மின்மயமாக்கப்படும். இதன் மூலம் கார்பன் உமிழ்வு குறைக்கப்படுவதுடன் எரிபொருள் செலவு சுமார் 40 சதவீதம் மீதமாகும். இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இந்த வருவாய் அடுத்த 5 ஆண்டில் மேலும் உயர்த்திக் காட்டப்படும். இதுதவிர, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் எடுத்துக் கொள்ள பிரச்னை இருப்பதாக தெரிவித்தனர். பட்டா நிலத்தில் செங்கல் சூளை அமைத்தல், விவசாய பட்டா நிலத்தில் இருந்து மண் எடுக்க திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக் கொள்ள சுற்றுச்சூழல் சான்று தேவையில்லை.

The post தமிழ்நாட்டில் 9 கிரானைட் சுரங்கங்கள் மின்மயம்: பேரவையில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: