மேம்பாலம் கட்டுமான பணிக்காக விஏஓ அலுவலகம் இடித்து அகற்றம்

பள்ளிபாளையம், ஏப்.6: சென்னை – கன்னியாகுமாரி தொழில்தட திட்டத்தின் மூலம், பள்ளிபாளையம் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து, காலனி மேம்பாலம் வரையிலுமாக 92 தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிபாளையம் 4 சாலை பகுதியில் இருந்து, நகராட்சி அலுவலகம் வரையில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக திருச்செங்கோடு, சங்ககிரி செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

மாற்றுப்பாதையாக ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், காவல் நிலையம் முன்பு இருந்து இ.ஆர். தியேட்டர் சாலை வழியாக காவேரி ரயில் நிலையம் செல்லும் சாலையில், திருச்செங்கோடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவேரி ரயில் நிலைய சாலையை தொடும் சங்ககிரி, சேலம் வாகனங்கள், இடதுபுறமாக திரும்பி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் வழியாக சென்று, நகராட்சி அலுவலகம் எதிரே வலதுபுறம் திரும்பி, சங்ககிரி பாதையில் பயணிக்க மாற்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாதாபுரம் பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், கிராம நிர்வாக அலுவலர் அலுவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு குடிநீர் வழங்கும் கிணறு இருப்பதால், இவ்வழியாக வாகனங்கள் சென்றால், கிணறு தூர்ந்துபோகும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, நேற்று கிராம நிர்வாக அலுவலகம் இடித்து அகற்றப்பட்டது. வாகன போக்குவரத்திற்கான மாற்றுப்பாதை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.

The post மேம்பாலம் கட்டுமான பணிக்காக விஏஓ அலுவலகம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: