இலத்தூர் சீவாடியில் பாழடைந்த கிணறை மூட கிராம மக்கள் கோரிக்கை

செய்யூர்: இலத்தூர் சீவாடி கிராம நெடுஞ்சாலையோரத்தில் விபத்து ஏற்படும் வகையில் உள்ள பாழடைந்த கிணறை மூட நடவடிக்கை எடுக்கும்படி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்யூர் வட்டம் இலத்தூர் ஒன்றியம் சீவாடி கிராமத்தில் இருந்து வடக்கு வாயலூர் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சீவாடி அடுத்த புன்னமை கிராம நெடுஞ்சாலையோரத்தில் கிணறு உள்ளது. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த கிணறை முறையாக பராமரிக்காததால் நாளடைவில் தூர்ந்துபோனது.

தற்போது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் வகையிலும் உள்ளது. கிணறு திறந்து கிடப்பதால் சிறுவர்கள் விளையாடும்போது கிணற்றுக்குள் விழுந்து பலியாகும் நிலையும், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பயன்படாத இந்த கிணறை மூடக்கோரி மக்கள் நீண்ட காலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, பெரிய விபத்து நடப்பதற்குள் புன்னமை கிராம நெடுஞ்சாலையோரத்தில் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கும் பாழடைந்த கிணறை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post இலத்தூர் சீவாடியில் பாழடைந்த கிணறை மூட கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: