சென்னை: சென்னை அருகே உள்ளாட்சி தேர்தல் நடந்த வாக்குச்சாவடியில் திமுக, அமமுக வேட்பாளர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உருட்டுக்கட்டைகளால் சரமாரி தாக்கிக் கொண்டனர். இதனால், போர்க்களம் போல மாறியது. போலீசார் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அேதபோல் மதுராந்தகம் அருகே அதிமுக எமஎல்ஏ சிறைபிடிக்கப்பட்டார். இதனால், அஙகு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் அரசுப் பள்ளியில் நேற்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இங்குள்ள 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் காசி, அமமுக சார்பில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக பிரமுகர் சார்பில் நியமிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்காளர்களுக்கு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அமமுக பிரமுகர் மகாலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ‘யாரைக் கேட்டு இதுபோல் செய்கிறாய்’ என கேட்டு அந்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்ததும், இருவரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர், உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த மிளகாய் பொடிகளை எடுத்து வந்து ஒருவர் மீது மற்றொருவர் வீசினர். இதனால் பயங்கர கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த மோதல் காரணமாக, ஓட்டுப்போட வந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறிஓடினர். இருதரப்பிலும் பெண்கள் உட்பட 15 பேருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும், அந்த சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்து அம்பத்தூர் இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் மாங்காடு போலீசார், அங்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலைமை சீரான பின்னர் மறுபடியும் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. பதற்றத்தை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சிறுப்பாக்கம் அருகே ஒரத்தி ஊராட்சியில் நேற்று 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இந்த ஊராட்சி அதிக வாக்காளர்களை கொண்டது. இதனால், வாக்குப்பதிவை பார்வையிட மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடி வளாகத்திற்கு வந்தார். அப்போது, அங்கு வந்தவர்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டதாக தெரிகிறது. உடனே, அங்கிருந்த திமுகவினர் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘நீங்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் முறை சரியாக உள்ளதா என பார்க்க வேண்டுமே, தவிர இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்யக் கூடாது’’ என கூறி பலரும் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் எம்எல்ஏ மரகதம் குமரவேலை, பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, அங்கிருந்த தேர்தல் பாதுகாப்பு போலீசார் மற்றும் ஒரத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் எம்எல்ஏ ஆகிய இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி கலைந்து செல்ல செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதைதொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்….
The post 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல்: அதிமுக எம்எல்ஏ சிறைப்பிடிப்பு: குன்றத்தூரில் திமுக-அமமுகவினர்உருட்டுக்கட்டைகளுடன் மோதல் appeared first on Dinakaran.
