செயற்பொறியாளர் உள்பட 6 பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு

நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாமக்கல் -மோகனூர்ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், கடந்த 15ம் தேதி நாமக்கல் மாவட்ட லஞ்சஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையின்போது, கணக்கில் வராத ₹84 ஆயிரத்து 900 அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த செயற்பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் போலீசார் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் (58), போர்மேன் பாலமுருகன் (46), வணிக உதவியாளர் மீனாட்சி (39), உதவி பொறியாளர்கள் லோகநாயகி (39), பிச்சைமுத்து (54), உதவி செயற்பொறியாளர் மீனாட்சி சுந்தரம் (40) ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். செயற்பொறியாளர் அலுவலகத்தில், புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் மின்பாதை மாற்றி அமைத்தல் போன்றவற்றுக்கு லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 5ம்தேதி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியதாகவும், அதில் தான் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: