எம்பிஏ படிப்பதற்கான கேட் நுழைவுத்தேர்வு

நாமக்கல், மார்ச் 28: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எம்பிஏ பொது நுழைவுத்தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச்சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில் நுட்பக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக மேலாண்மை மேற்படிப்பு பயில, நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கேட் பொது நுழைவுத்தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.

இப்பயிற்சியினை பெற, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த (B.E, B.Tech. B.Sc, BBA, etc) அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இண்டர்நெட் மூலம் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கேட் தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயிற்சி பெற www.tahdco.com என்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: