எஸ்எஸ்எல்சி தேர்வு முன்னேற்பாடுகள் தேர்வு பணி ஆசிரியர்களுடன் டிஇஓ ஆலோசனை

நாமக்கல், மார்ச் 28: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடக்க உள்ளதையொட்டி, தேர்விற்கான முன்னேற்பாடுகள் குறித்து, தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் மாவட்ட கல்வி அலுவலர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 300 பள்ளிகளை சேர்ந்த 20,641 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். தேர்விற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் சுயவிபரங்கள் அடங்கிய முகப்பு பக்கத்துடன், விடைத்தாள்கள் தைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள், நாமக்கல் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, 9 கட்டுகாப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு பணியில், இந்த ஆண்டு 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 94 துறை அலுவலர்கள், ஒரு கூடுதல் துறை அலுவலர், 20 வழித்தட அலுவலர்கள், 9 கட்டுகாப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்களாக, அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மூத்த பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்களாக, அரசு பள்ளியில் பணியாற்றும் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் எடுத்து செல்லும் வழித்தட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை வகித்து பேசியதாவது: எஸ்எஸ்எல்சி அரசுபொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை தேர்வுத்துறையின் விதிமுறைகளின் படி மேற்கொள்ளவேண்டும்.

தேர்வு பணியில் தங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகளை அறிந்து செயல்படவேண்டும். தேர்வினை நேர்மையாக நடத்தவேண்டும். தேர்வு தொடர்பான அனைத்து பணிகளுக்கும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த குறித்த நேரத்துக்குள் பணிகளை முடித்து விடவேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் தேர்வு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும். இந்த ஆண்டு, தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளின் விபரங்களை முன்கூட்டியே சொல்லவேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முதன்மை கண்காணிப்பாளர்கள் அனைவரும், மதியம் 1.15 மணிக்குள் தேர்வுக்கு வராத மாணவ, மாணவிகளின் விபரங்களை, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும்.

இதில் எந்த காரணம் கொண்டு தாமதம் செய்யக்கூடாது. அனைத்து மையங்களுக்கும், வினாத்தாள் குறித்த நேரத்தில் செல்வதை வழித்தட அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு மாவட்ட கல்வி அலுவலர் ரவி தெரிவித்தார். கூட்டத்தில், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, மூத்த கண்காணிப்பாளர் விக்டர்பால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட கல்வி அலுவலர் ரவி, தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கி  அதற்கான நியமன கடிதத்தை வழங்கினார்.

Related Stories: