(தி.மலை) வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக இளைஞர்களிடம் ₹1.50 கோடி வரை மோசடி * திருவண்ணாமலையில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு * வாலிபரிடம் போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை, மார்ச் 28: வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையை போத்தராஜா கோயில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாச்சி மகன் பிரேம்குமார்(37). இவர், திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடை முன்பு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது. மேலும், திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரம்குமார், மயிலாடுதுறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக இளைஞர்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்ததாகவும், சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹1 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை பணம் பெற்று ஏமாற்றியதாகவும், தங்களுடைய பாஸ்போர்ட்டையும் பெற்றுக்கொண்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

பணத்தையும், பாஸ்போர்ட்டையும் திரும்பத்தரக்கோரி பலமுறை கேட்டும், தொடர்ந்து அலைகழிப்பதால் திருவண்ணாமலைக்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் அளித்த உறுதியை ஏற்று இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து, பிரேம்குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரை நேற்று மாலை விடுவித்தனர். இந்த சம்பத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: