வாழப்பாடியில் புதிய உழவர் சந்தைக்கான இடம் தேர்வு

சேலம், மார்ச் 27: விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாழப்பாடியில் புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் சந்தைகளில் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கடந்த  1999ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, உழவர் சந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.

தற்போது மாநிலம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, ஆட்டையாம்பட்டி, மேட்டூர், ஆத்தூர், இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இடைப்பாடி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைகளில், விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் என நாள்தோறும் 250 டன் வரை, நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகம் உள்ள பிற பகுதிகளுக்கும் உழவர் சந்தை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

குறிப்பாக, காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படும் வாழப்பாடிக்கு புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மாநிலம் முழுவதும் ஏற்கனவே உள்ள உழவர் சந்தைகள் சீரமைக்கப்படுவதுடன், புதிதாக உழவர் சந்தைகள் தொடங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் மேச்சேரியில் புதிதாக உழவர் சந்தை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி வாழப்பாடியில், பேரூராட்சிக்குட்பட்ட கடலூர் மெயின்ரோட்டில் உழவர் சந்தைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, டிஆர்ஓ மேனகா, சேலம் ஆர்டிஓ (பொ) சரவணன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தற்போது புதிய உழவர் சந்தை அமைகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்பொழுது வாழப்பாடியில் உழவர் சந்தை தொடங்கப்படுவதால், பலர் இங்கு காய்கறிகளை விற்பனை செய்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கருமந்துறையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் வாழப்பாடி பகுதியில் அதிகம் விளைக்கூடிய தக்காளி, வாழை, தென்னை உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை, வாழப்பாடியில் அமையவுள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்திடும் வகையில், உழவர் சந்தைக்குரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உழவர் சந்தைக்குரிய புதிய அடையாள அட்டையினை பெறலாம். இதற்காக எந்தவித கட்டணமும் விவசாயிகள் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: