மாணவியின் சிகிச்சைக்கு ரூ.4.33 லட்சம் நிதியுதவி

பள்ளிபாளையம், மார்ச் 27: பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலாஜி. வாய் பேச முடியாத இவர் விசைத்தறி கூலித்தொழிலாளி. இவரது மகள் லோகாஸ்ரீ(15), அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பிறவியிலேயே லேகாஸ்ரீக்கு கேட்கும் திறன் குறைவாக இருந்தது. இவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம், கேட்கும் திறனுக்காக காதின் உட்புறம் ஒரு கருவியையும், வெளிப்புறம் ஒரு கருவியையும் பொருத்தினர். கடந்த பத்து வருடங்களாக இயங்கிய வெளிப்பகுதியில் உள்ள கேட்கும் கருவி பழுதாகிப் போனதால், மாணவியின் கற்கும் திறன் குறைந்து போனது. புதிய கருவியை பொருத்த ரூ.4.33 லட்சம் செலவாகுமென மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்த பள்ளிபாளையம் ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் சம்பத், மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கான தொகையை பல்வேறு தரப்பினரிடமிருந்தும் நன்கொடையாக பெற்றார். காடச்சநல்லூர் ஊராட்சியில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய திமுக செயலாளர் வெப்படை செல்வராஜ் ஆகியோர், மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கான தொகையை வழங்கினர். நிகழ்ச்சியில், ஆலாம்பாளையம் பேரூர் செயலாளர் கார்த்திராஜ், ரமேஷ், ஜெயகோபி, கிருஷ்ணமூர்த்தி, வினோத்குமார், ராக்கேஷ்கண்ணா, தனசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: