சமயசங்கிலி கதவணையில் தண்ணீர் தேக்கும் பணி

பள்ளிபாளையம், மார்ச் 27: சமயசங்கிலி கதவணையில் தண்ணீர் தேக்கும் பணியின் காரணமாக, இன்று ஒருநாள் மட்டும் பள்ளிபாளையம் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாத பகுதியை நகராட்சி அறிவித்துள்ளது. சமயசங்கிலி கதவணையிலிருந்து பள்ளிபாளையம் நகராட்சிக்கு தேவையான தண்ணீர் பெறப்பட்டு, சுத்தப்படுத்தி வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. காவிரியில் நீர் திறப்பு 1500 கன அடியாக குறைக்கப்பட்டதால், சமசயங்கிலி கதவணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக, அணையின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் பள்ளிபாளையம் நகராட்சிக்கு தேவையான தண்ணீரை பெற, நகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆற்றின் நீர் தேங்கியுள்ள பகுதியில், கூடுதல் குழாய்கள் மூலம் புதிய மின் மோட்டார்கள் பொருத்துப்பட்டு, நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. தற்போது, சமயசங்கிலி கதவணையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மீண்டும், கதவுகளை மூடி நீரை தேக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அணையின் முழு அளவிற்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் நடுவில் பொருத்திய குழாய்கள், மோட்டார்களை அகற்றி மேடான பகுதியில் பொருத்தும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால் இன்று (27ம் தேதி) ஒருநாள் மட்டும், ஜீவா ஷெட் குடிநீர் தொட்டி நீர்வழங்கல் பகுதியான துப்புரவாளர் குடியிருப்பு, வாய்க்கால்ரோடு, மாரியம்மன் கோயில் வீதி, நேருநகர், கொங்குமண்டபம் பின்பகுதி, பெரும்பாறை காடு, திருச்செங்கோடு ரோடு, ஜிவிமகால் ரோடு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என நகராட்சி ஆணையாளர் தாமரை அறிவித்துள்ளார்.

இதேபோல், ஆவாரங்காடு குடிநீர் மேல்நிலைத்தொட்டியின் மூலம் நீர் வழங்கப்படும் பகுதிகளான, கருமாரியம்மன் கோயில்வீதி, முனியப்பன் கோயில்வீதி, புதுப்பிள்ளையார் கோயில் வீதி, எம்ஜிஆர் நகர், மீனவர் தெரு, அம்மன் நகர், காவேரி நதிக்கரை வீதிகளிலும் குடிநீர் விநியோகம் இருக்காது. மாலையில் ஜீவா பணிமனை, பெரியகாடு, அம்மன்நகர், வாய்க்கால் ரோடு 1, ஆண்டிகாடு, வெடியரசம்பாளையம் ரோடு, அமராவதி லைன், கேஆர்பிஏடி ரோடு பகுதியிலும் குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: