மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கட்லா கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர். 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். வழிபாட்டிற்கு பின் ஊர் முக்கியஸ்தர்களான செந்தில், வரதராஜன், சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் வெள்ளை வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.