முட்டுக்காடு படகு குழாமில் ரூ.5 கோடியில் மிதக்கும் உணவக கப்பல்: அமைச்சர் பணிகளை தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 25: முட்டுக்காடு படகு குழாமில், ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவக கப்பல் கட்டும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. அடையாறில் இருந்து 23 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இந்த படகு குழாம், 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டு, மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 15 அதிவேக படகுகளும், 27 வேக படகுகளும், 9 கால்மிதி படகுகளும், 2 உயர் வேக நீருக்கடி படகுகளும் உள்ளன.

படகில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக, மூங்கிலால் வேயப்பட்ட இல்லமும், உணவகமும் இங்கு உள்ளன. குடிநீர் வசதி, கழிப்பறை வாகன நிறுத்துமிடமும் உள்ளன. வாரவிடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படகு குழாமில், தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்ட உணவகத்துடன் கூடிய, 2 அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி நேற்று காலை தொடங்கியது.

விழாவிற்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளர் சந்தரமோகன் வரவேற்றார். செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் கப்பல் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பாரதிதேவி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன், திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர், கப்பல் கட்டுமான நிறுவனமான கிராண்ட் யூனர் மரைன் நிறுவன உயர் அதிகாரிகள் ஜோஜி செபஸ்தியான், ஓஜெஸ் செபஸ்தியான், திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, சசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: