நாமக்கல் மாவட்டத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கலெக்டர் கடும் எச்சரிக்கை

நாமக்கல், மார்ச் 25: நாமக்கல் மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கடும் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசுகையில், ‘நாமக்கல் மிகவும் அமைதியான மாவட்டமாகும். சமீபத்தில் ஜேடர்பாளையத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. விவசாய தோட்டங்களுக்கும் தீ வைக்கப்படுகிறது. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகிறது. மாவட்டத்திலேயே கரும்பு அதிகம் அங்கு தான் உற்பத்தியாகிறது. இரண்டு சமூகத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்த சிலர் திட்டமிடுகிறார்கள். மேலும், கரும்பு பயிருக்கும் சேதம் விளைவிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம், உளவுத்துறை மூலம் கண்காணித்து தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் ஸ்ரேயாசிங், ‘பெண் கொலை வழக்கு மற்றும் அதை தொடர்ந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகளுக்கு தீ வைத்த சம்பவத்தில், தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது, குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. காவல்துறையினர் தேவையான பாதுகாப்பு அளிப்பார்கள். ஜேடர்பாளையம் பகுதியில் விவசாய தோட்டங்கள், பயிர்களுக்கு தீவைக்கும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

இதையடுத்து பேசிய விவசாயிகள், ‘காவிரி ஆற்றில் அனுமதியில்லாமல் இயங்கும் நீரேற்று பாசன சங்கங்களை முறைப்படுத்த வேண்டும். ராஜவாய்க்காலில் தண்ணீர் வராத காலத்திலும், ஆற்றிலும் இருந்து முறைகேடாக பாசன சங்கத்தினர் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். அத்தகைய சங்கங்களின் மின்இணைப்புகளை துண்டிக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாய தோட்டங்களை சேதப்படுத்தும் மயில்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், ‘பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து, காவிரி ஆற்று பகுதியில் ஆய்வு செய்வார்கள். இதில் முறைகேடாக தண்ணீர் எடுக்கும் நீரேற்று பாசன சங்கங்கள் கண்டறியப்பட்டால், அவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது,’ என்றார்.

முன்னதாக விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம், கொமதேக விவசாய அணி தலைவர் ரவிசந்திரன் மற்றும் சில விவசாயிகள் வளையப்பட்டி பகுதியில் சிப்காட் (தொழிற்பேட்டை) அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், டிஆர்ஓ மணிமேகலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன்,  நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சிவக்குமார், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குநர் நாசர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்களை காப்பது கடமை

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சுந்தரம் பேசுகையில், ‘ஜேடர்பாளையத்தில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அங்கு விரும்பத்தகாத சம்வங்கள் நடந்தன. இரவு நேரத்திலும், கலெக்டர் அந்த கிராமத்துக்கு நேரில் சென்று, பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபட்டார். கலெக்டரே இரவு நேரத்தில் அங்கு வந்து உரிய நடவடிக்கை எடுத்ததால், மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. இதற்காக கலெக்டரை பாராட்டுகிறேன்,’ என்றார். இதற்கு பதில் அளித்த கலெக்டர், அரசு நிர்வாகம் என்பது 24மணி நேரமும் பணியில் இருப்பது தான். மக்களை காப்பது தான், கலெக்டரின் கடமை. நாமக்கல் மாவட்ட மக்களை பாதுகாப்பது தான் எங்களுக்குள்ள பொறுப்பாகும். அதை தான் நாங்கள் செய்தோம். நாமக்கல் மாவட்டம் அமைதியான மாவட்டம் என்ற நிலை தொடர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: