நாமக்கல்லில் ₹6.93 கோடி மோசடி வழக்கில் தனியார் நிறுவன பெண் பங்குதாரர் உள்பட 4பேர் கைது

நாமக்கல், மார்ச் 25: நாமக்கல்லில் ₹6.93 கோடி மோசடி வழக்கில் தனியார் நிறுவன பெண் பங்குதாரர் உள்பட 4பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் துறையூர் சாலை நகராட்சி மண்டபம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மணி டீல் டிரேடிங் சொல்யூஷன் இன்- மொபைல் அப்ளிகேஷன் என்ற தலைப்பில், ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனம் 6 வகையான மொபைல் அப்ளிகேஷன் முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக கூறி, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்தது.

குறைந்த பட்சம் ₹10ஆயிரம் செலுத்த வேண்டும். இதற்கு போனசாக 6 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை கிடைக்கும் என அறிவிப்பு செய்தது. இதை நம்பி, 100க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தனர். ஆனால் இந்த நிறுவனம் பணம் முதலீடு செய்தவர்களை மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி குறித்து, குமாரபாளையத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு புகார் அளித்தார். அதில், 2018- ஜூன் முதல் 2019ம் மே வரை எனது உறவினர்களிடம் பணம் பெற்று ₹12.57 லட்சம் முதலீடு செய்யப்பட்டது.

இதில் ₹6.20 லட்சத்தை திருப்பித் தராமல் நிறுவனத்தினர் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார், அழகர், ராமச்சந்திரன், தேவி, மணி, லயா (எ) சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்ட 11பேர், 164 பேரிடம் இருந்து ₹6.93 கோடியை பெற்று ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு இந்த மோசடியில் தொடர்புடைய 7பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன பங்குதாரர்களான ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கனகா (49), கார்த்திக், திருச்செங்கோட்டை சேர்ந்த ஆறுமுகம், விருதுநகரை சேர்ந்த பிரபாகரன் (41) ஆகிய 4பேரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: