திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு: 29,923 பேர் பங்கேற்பு

திருவண்ணாமலை, மார்ச் 24: திருவண்ணாமலை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 29,923 மாணவர்களுக்கு, அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.

அதையொட்டி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கியது. அறிவியல் பாடத்திற்கான மொத்த மதிப்பெண் 100. அதில், 75 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி மற்றும் சுய நிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்பட மொத்தம் 501 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 15,302 மாணவர்கள், 14,621 மாணவிகள் உள்பட 29,923 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.

எனவே, பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. செய்முறைத் தேர்வு அக மதிப்பீட்டு அலுவலராக வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், செய்முறைத் தேர்வு நடைபெற்ற மையங்களில், முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories: