கோயிலுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் வேன் மோதி ஒருவர் பலி

செய்யாறு, மார்ச் 24: கோயிலுக்கு சென்று திரும்பியபோது, மரத்தில் வேன் மோதியதில் ஒருவர் பலியானார். மேலும், வேனில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் பழனிவேல் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன்(74). அவரது மனைவி சின்னம்மாள்(66). இவர்கள் உள்ளிட்ட 12 பேருடன் கடந்த 20ம் தேதி செய்யாறிலிருந்து முருகனின் அறுபடை வீடு கோயில்களில் தரிசனம் செய்ய வேனில் 2 நாள் சுற்றுலா பயணம் சென்றனர். பின்னர், கோயில்களில் தரிசனம் முடிந்து அனைவரும் ஊருக்கு திரும்பினர். வேனை செய்யாறை சேர்ந்த தனதேவன்(58) என்பவர் ஓட்டினார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் செய்யாறு- வந்தவாசி சாலையில் குளமந்தை கிராம பஸ் நிறுத்தம் அருகே வேன் வந்து கெண்டிருந்தது. அப்போது, வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில், நரசிம்மன், அவரது மனைவி சின்னம்மாள், செய்யாறு செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த வேதாசலம்(68), வடிவேலன்(46) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதைகண்ட அவ்வழியாக சென்றவர்கள் அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நரசிம்மன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சின்னம்மாள், வடிவேலன், வேதாசலம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இறந்தவரின் மகன் சக்திரநாராயணன் அனக்காவூர் போலீசாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் அனக்காப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: