தூங்கிய பெண்ணின் முகத்தை துணியால் கட்டி 17 சவரன், ₹68 ஆயிரம் கொள்ளை தண்டராம்பட்டு அருகே பரபரப்பு சம்பவம் அதிகாலையில் வீடு புகுந்து கும்பல் அட்டூழியம்

தண்டராம்பட்டு, மார்ச் 23: தண்டராம்பட்டு அருகே அதிகாலையில் பால் வியாபாரி வீட்டில் புகுந்த மர்ம கும்பல் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் முகத்தை துணியால் கட்டிவிட்டு 17 சவரன், ₹68 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பறையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(55), பால் வியாபாரி. இவர் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து தனியார் கம்பெனிக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி(52). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி மூத்த மகன் நவீன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். புதுச்சேரியில் தங்கி வேலை செய்யும் இளைய மகன் சந்திரகுமார் வார விடுமுறை நாட்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவரது மனைவி குட்டிமா(35) மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். குட்டிமாவுக்கு இன்னும் குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குட்டிமா வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அவரது மாமனார் பார்த்தசாரதி, மாமியார் பத்மாவதி ஆகியோர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் கதவு தாழ்பாள் போடப்படாமல் இருந்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் தூங்கிக் கொண்டிருந்த குட்டிமாவின் முகத்தை துணியால் கட்டிவிட்டு அவரது கழுத்தில் இருந்த தாலிச்சரடு உள்ளிட்ட 7 சவரன் நகைகளை அறுத்துக்கொண்டு சென்றுள்ளனர். மேலும், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 10 சவரன் நகை மற்றும் ₹68 ஆயிரம் ரொக்க பணத்தையும் மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதற்கிடையே சத்தம் கேட்டு பார்த்தசாரதி, பத்மாவதி ஆகியோர் எழுந்து வந்தனர். அதற்குள் மர்மகும்பல் வீட்டிலிருந்து வெளியே சென்றது. உடனடியாக குட்டிமாவின் முகத்தில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துவிட்டவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்ப்பதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு பார்த்தசாரதி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, பீரோ திறக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தது. மேலும், வீட்டின் காம்பவுன்ட் சுவர் அருகே காலி நகை பெட்டி, பர்ஸ்கள் ஆகியவற்றை கொள்ளை கும்பல் வீசி சென்றது தெரியவந்தது. இதற்கிடையே, திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் மியா வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று மீண்டும் திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து பால்வியாபாரி பார்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் தச்சம்பட்டு எஸ்ஐ நதியா வழக்குப்பதிந்து கொள்ளை கும்பலை வலை வீசி தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: