322 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

நாமக்கல், மார்ச் 23: நாமக்கல் மாவட்டத்தில், உலக தண்ணீர் தினத்தையொட்டி322 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மழை நீர் சேகரிப்பு மற்றும் புதிய குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உலக தண்ணீர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும், நேற்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள பிள்ளைகளத்தூர் ஊராட்சியில், நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிராமங்களில் புதிய குடிநீர் ஆதாரங்களை கண்டறிய வேண்டும். பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைக்க வேண்டும்.

அனைத்து நீர் நிலைகளையும் கணக்கெடுத்து, அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மகளிர் சுய உதவி குழுவினர், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதுமான தண்ணீர் கிராமங்களில் இருந்தாலும், தரமான தண்ணீரின் அவசியம் குறித்து, அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,’ என்றார். இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 322 ஊராட்சிகளிலும், நேற்று சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீரை, பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து பொதுமக்களுடன் விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: