கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை

பரமத்திவேலூர், மார்ச் 23: பரமத்திவேலூர் அருகே நடந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, கிராம மக்களிடையே, கலெக்டர் மற்றும் எஸ்பி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பரமத்திவேலூரை அடுத்து ஜேடர்பாளையம் பகுதியில் நடந்து வரும் தொடர் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்பாக, கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்பி கலைச்செல்வன் ஆகியோரது தலைமையில் அமைதி கூட்டம், ஜேடர்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில் ஆலைக்கொட்டகை உரிமையாளர்கள், ஜேடர்பாளையம் பகுதி மக்கள் மற்றும் கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி, தேவையற்ற அசம்பாவிதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல், கிராமத்தில் அமைதி நிலை காக்க, அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்புகள் செய்து தரப்படும். மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட நிகழ்வுகள் குறித்த தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்பாமல், அமைதிக்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வடகரையாத்தூர் மற்றும் கரப்பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இருதரப்பினரின் கோரிக்கைகளை, கலெக்டர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், டிஎஸ்பி கலையரசன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: