மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்

நாமக்கல், மார்ச் 21:  நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ், தலா ரூ.83,500 மதிப்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர ஸ்கூட்டர்களை ராஜேஷ்குமார் எம்பி வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தலா ரூ.83,500 மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.9,050 மதிப்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், தலா ரூ.6,840 மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் மெசின்கள் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,23,110 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும்,

தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில், பணியிடத்தில் விபத்தால் மரணம் அடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5லட்சம் வீதம் 4 பேருக்கு, விபத்து உதவித்தொகை ரூ.20லட்சம் என மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ.23,23,110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக நடைபெற்ற, மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 293 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார். அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த கலெக்டர், அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ. மணிமேகலை, டிஆர்டிஏ. திட்ட இயக்குனர் சிவகுமார், நகர்மன்ற தலைவர் கலாநிதி, முன்னாள் எம்பி.சுந்தரம், திமுக நகர செயலாளர்கள் சிவக்குமார் ரானா ஆனந்த், ஒன்றிய செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: