வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை வெட்டி 40 சவரன், ₹80 ஆயிரம் கொள்ளை: போலீசில் புகார் அளிக்க கூடாது என நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

அண்ணாநகர்: வீட்டில் தனியாக இருந்த  இன்ஸ்பெக்டர் மனைவியை கத்தியால் வெட்டி, 40 சவரன், ₹80 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்ததுடன், புகார் அளித்தால் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம், என மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கங்கா (70). இவரது கணவர் உமாசங்கர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவனை இழந்த கங்கா தனது மகன்  மகாதேவன் பிரசாத் (45) மற்றும்  மருமகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மகனும், மருமகளும் வேலைக்கு சென்றுள்ளனர்.

கங்கா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. கங்கா வந்து கதவை திறந்தபோது, வெளியின் நின்றிருந்த 4 பேர், ‘‘உன் மகன் வீட்டில் இல்லையா, வேறு யார் இருக்கிறார்கள்’’ என்று கேட்டுள்ளனர். அதற்கு கங்கா, ‘‘நீங்கள் யார், எதற்கு எனது மகனை கேட்கிறீர்கள்,’’ என்று கேட்டுள்ளார்.  அப்போது, திடீரென கங்கா வாயில் துணியை வைத்து அடைத்த மர்ம நபர்கள், கத்தி முனையில் அவரை வீட்டிற்குள் தள்ளி, கை, கால்களை கட்டிப்போட்டுள்னர். பின்னர், வீட்டில் கதவை உள்பக்கமாக தாழிட்ட அவர்கள், பீரோவில் உள்ள நகை, பணத்தை எடுத்து தரும்படி மிரட்டியுள்ளனர்.

‘‘தன்னிடம் பீரோ சாவி இல்லை’’ என்று கங்கா கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், கத்தியால் கங்காவை நிர்வாணப்படுத்தி தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும், அவரது கை விரலை வெட்டியுள்ளனர். வாயில் துணி வைத்து அடைத்து இருந்ததால், அவர் அலறிய சத்தம் வெளியில் யாருக்கும் கேட்கவில்லை.  இதையடுத்து, கங்கா அணிந்திருந்த செயின், கம்மல், மோதிரம் மற்றும் பீரோ பூட்டை உடைத்து அதில் இருந்த நகைகள் என 40 சவரன், ₹80 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர்கள், இதுபற்றி போலீசில் புகார் அளித்தால், உனது நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம், என மிரட்டி விட்டு  தப்பி சென்றுள்ளனர்.

 இந்நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது மகன், தனது தாய் தாக்கப்பட்டு மயங்கி கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, மணிகண்டன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் தலைமறைவாகி விட்டனர். முதற்கட்ட  விசாரணையில், கங்காவின் மகன்  மகாதேவன் வேலை செய்யும் கம்பனியில் உடன் வேலை செய்யும் மணிகண்டன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கங்காவை வெட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 40 சவரன் மற்றும் ₹80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: