அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போக்குவரத்து ஆய்வாளர் பணியில் இருந்து விடுவிப்பு: கூடுதல் ஆணையர் அதிரடி

சென்னை: விபத்தில் சிக்கும் பொதுமக்களை வழக்கு தொடர செய்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து பெண் ஆய்வாளர் பணியில் இருந்து விடுவித்து, தாம்பரம் சரக கூடுதல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தாம்பரம் காவல் ஆணையரகம் அமைக்கப்பட்ட பிறகு,  விபத்துகள் குறித்து  விசாரணை செய்ய     பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு   புதிதாக தொடங்கப்பட்டது. இங்கு சில மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டராக  ராணி பணி அமர்த்தப்பட்டார்.  இவர்,  காவல்துறை சார்பில்,   ஒதுக்கப்பட்ட ஜீப்பை ஓட்டுவதற்கு,   தனது  சொந்த செலவில் டிரைவர் ஒருவரை நியமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தனது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்து  நடந்தால்,  தான் நியமித்த டிரைவரை  அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் சம்பவ இடத்திற்கு செல்வது,  விபத்து நடந்த இடத்திற்கு வேண்டிய வழக்கறிஞர்களை  அழைத்து  சென்று, பிறகு வழக்குப்பதிவு செய்து, இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்களை அறிவுறுத்தி வந்துள்ளார். இதை ஏற்க மறுக்கும் பொதுமக்களை ஆய்வாளர் என்ற முறையில், அவர் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை லஞ்சமாக அவர் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இதுதொடர்பாக, பொதுமக்கள் சிலர் தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தனர். முன்னதாக  உளவுத்துறை போலீசாரும், இதுதொடர்பாக,  அறிக்கை ஒன்றை தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

 இதையடுத்து ஆணையர் அமல்ராஜ், புகார்கள் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிற்கு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரித்த அவர், குற்றச்சாட்டுகள் உண்மை என்று  அறிக்கை தாக்கல் செய்தார்.   இதனையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு துறை  இன்ஸ்பெக்டர் ராணி கடந்த ஆகஸ்ட் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இந்நிலையில், காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட, காவல் ஆய்வாளர் ராணியை பணியில் இருந்து விடுவித்து, நேற்று முன்தினம் தாம்பரம் மாநகர காவல் தலைமையிட கூடுதல் ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: