அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு: மக்கள் குறைதீர்க்கும் முகாம்

ஈரோடு, மார்ச் 21:  அடிப்படை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு சாஸ்திரி நகர் நலச்சங்கத்தின் தலைவர் ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  ஈரோடு மாநகராட்சி 58வது வார்டுக்கு உட்பட்ட சாஸ்திரி நகர் வாய்க்கால் மேட்டில் இருந்து சாஸ்திரி நகர் சந்தை வரை வாய்க்கால் வருகிறது. பல ஆண்டாக தூர்வாராமல், செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துகள் அதிகரித்துள்ளது.

குறிஞ்சி நகர் வீதியை சேர்ந்த மக்களும் சிரமப்படுகின்றனர். முத்துசாமி காலனி, வேலவன் வீதி, குமரன் நகர், குறிஞ்சி நகர், கருப்பண்ண சாமி கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, நேருஜி வீதி, கிருஷ்ணா வீதி, அண்ணல் காந்தி வீதி, விவேகானந்தர் வீதி, லெனில் வீதி, காமராஜர் வீதி, செல்லமுத்து கவுண்டர் தோட்டம் போன்ற 20க்கும் மேற்பட்ட வீதிகளில் தார் சாலை வசதி இல்லாமல், குண்டும், குழியுமாக உள்ளது. விபத்துகள் அதிகமாக நடப்பதை தடுக்க, தார் சாலை அமைக்க வேண்டும். இப்பகுதிகளை ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துடன் இணைத்து இணைப்பு வழங்க வேண்டும். பொதுக்கழிப்பிடம்:பெருந்துறை தாலுகா முள்ளம்பட்டி பஞ்.,

கரையக்காடு காலனி பகுதியை சேர்ந்த தவசியம்மாள் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முள்ளம்பட்டி பஞ்சாயத்து, கரையக்காடு காலனி பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்குள்ள வீடுகளில் கழிப்பிட வசதி இல்லை. ஊரில் பொது கழிப்பிடம் இல்லை. இதனால், பெண்கள், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள் வரை இயற்கை உபாதைக்காக சாலை ஓரங்களில் மலம் கழிக்க செல்லும்போது, விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படுகிறது. பொதுக்கழிப்பிடம் இல்லாதததால் எங்கள் ஊரை சேர்ந்த இளைஞர்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்க மறுக்கின்றனர். எங்கள் பகுதியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளன. எனவே, பொதுமக்கள் வசதிக்காக பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: