சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் ₹880 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அறிவிப்பால் உற்பத்தியாளர், நெசவாளர்கள் மகிழ்ச்சி

சேலம், மார்ச் 21: தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டில் சேலத்தில் ₹880 கோடியில் 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு லட்சம் ேபருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஜவுளி உற்பத்தியாளர்களும், நெசவாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், விருதுநகர், கரூர், காஞ்சிபுரம், திருபுவனம், கும்பகோணம் உள்பட பல பகுதிகளில் விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதிகளில் விசைத்தறியில் இருந்து அபூர்வா ஜரிகை சேலை, காட்டன் டவல், வேஷ்டி, சேலை, துண்டு, ஜமக்காளம், ேபார்வை உள்ளிட்ட ஏற்றுமதி ஜவுளி ரகங்களும், கைத்தறியில் இருந்து பட்டுச்சேலை, வேட்டி, துண்டு உள்பட பல்வேறு ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், இதைதவிர மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபாய், லண்டன், ஆஸ்திரேலியா உள்பட பல வெளிநாடுகளுக்கும் செல்கிறது. ஜவுளி உற்பத்தியை  பொறுத்தமட்டில் 2014ம்ஆண்டுக்கு முன்புவரை நல்லமுறையில் இருந்தது. அதன்பின்பு வந்த ஒன்றிய ஆட்சியாளர்கள் ஜவுளித்துறையை பொருட்படுத்தாத நிலை தொடர்கிறது. இதனால் நாளுக்குநாள் ஜவுளி தொழில் நலிந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு கேண்டி பஞ்சு ₹54 ஆயிரத்துக்கு விற்றது. இது படிப்படியாக உயர்ந்து கடந்தாண்டு மே மாதத்தில் ₹1 லட்சத்து 5 ஆயிரம் வரை விலை அதிகரித்தது. இது ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய ஆர்டர்கள் வரத்தும் சரிந்தது. இதனால் பல விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டது. தற்போது பஞ்சு விலை சற்று குறைந்துள்ளதால் ஜவுளி உற்பத்தி தொழில் சீராக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய, மாநில அரசுகளின் பட்ஜெட்டில் ஜவுளிக்கான அறிவிப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்டம் ஜவுளி தொழிலில்  முக்கிய பங்களித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் சேலத்தில் ₹880 கோடியில் 119 ஏக்கரில் தனியார் பங்களிப்புடன் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். தங்களின் பல்லாண்டு கோரிக்கை தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெசவுத் தொழிலில் தான், அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழிலில் மட்டும்  50லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஜவுளி உற்பத்தியை பொறுத்தமட்டில் பஞ்சு உற்பத்தி செய்வதில் இருந்து அது ஆடையாக வாடிக்கையாளர்களிடம் சென்று சேரும்வரை நூறுக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்களை கடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொன்றுக்கும் ஒரு இடத்தை தேடி போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து,  காலவிரயம் உள்பட பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். இவைகள் அனைத்து ஒரே இடத்தில் இருந்தால் இடர்பாடுகளை தவிர்க்கலாம். இதற்கு ஜவுளி உற்பத்தி சார்ந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினர்.

அந்த வகையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஜவுளி உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. ஏற்கனவே இதற்கான பணிகளை தொடங்கிய தமிழ்நாடு அரசு, சேலத்தில் 119 ஏக்கர்பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதற்காக பட்ஜெட்டில் ₹880கோடி ஒதுக்கியுள்ளது. அதோடு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் அமையும் இந்த பூங்காவில் தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்பும் இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மேற்கு மண்டலத்தில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர், நெசவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜவுளி பூங்கா அமைவதால் புதியதாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நெசவுத்தொழிலின் வளர்ச்சியும் அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: