(தி.மலை) மண் கொள்ளையர்களை கைது செய்யக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ஏரிக்கரை உடைப்பு

கீழ்பென்னாத்தூர், மார்ச் 21: கீழ்பென்னாத்தூர் அருகே ஏரி கரையை உடைத்து மண் கொள்ளை அடித்த 2 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து உள்ளிட்டவைகள் கிராம மக்களால் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து சுற்று வட்டார கிராமமான தயலாங்குளம், ஈச்சங்காடு, வீரபத்திர நகர் மற்றும் பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும், குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், கரிக்கலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருவர் கடந்த 9ம் தேதி இரவு பெரிய ஏரியின் கரையை உடைத்து சுமார் 35 அடி அகலம் கொண்ட ஏரிக்கரையில் இருந்து முக்கால் பங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் அத்துமீறி மண் அள்ளியதாகவும், ஏரி கரையின் மண்ணை திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் கலந்த கொண்டவர்கள், மண்ணை கொள்ளையடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடைவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: