பங்குனி தேர்த் திருவிழாவின் 10ம் நாளில் திருவெள்ளறை பெருமாள் கோயிலில் சேர்த்தி சேவை

திருச்சி: ரங்கம் கோயிலின் உபகோயிலான திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோயில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டிற்கான விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் புறப்பாடு நடைபெற்று வருகிறது.கடந்த 16ம் தேதி பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு திருவாராதனம், சூர்ணாபிஷேகம் மற்றும் நெல்லளவு கண்டருளினார். மாலை 6.30 மணிக்கு பெருமாள் தாயாருடன் பூந்தேரில் புறப்பாடாகி வீதி உலா வந்து தாயார் சந்நிதி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். 8ம் நாளான கடந்த 17ம் தேதி பெருமாள் வண்டுலூர் சப்பரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் விழாவான தேரோட்டம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 5.30 மணிக்கு அலங்காரத்தில் பெருமாள், தாயார் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து 12.45 மணி அளவில் துவங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து இரவு தீர்த்தவாரி நடந்தது.

10ம் நாள் விழாவான நேற்று (19ம் தேதி) காலை 10 மணிக்கு கத்யத்ரய கோஷ்டி நடக்கிறது. திருவாராதனம், திருமஞ்சனம், அலங்காரம், கோஷ்டி உபயக்காரர் மரியாதையாகி மாலை 5.30 மணிக்கு பெருமாள், தாயார் கண்ணாடி அறையில் இருந்து புறப்பாடாகி இரவு 7.30 மணிக்கு தாயார் சந்நிதி எதிரே உள்ள ஆனந்தராயர் மண்டபம் சென்றடைந்தனர். அங்கு தாயார் பங்கஜவல்லி, செங்கமலவல்லி ஆகியோருடன் சேர்த்தி சேவை நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்நிலையில் பங்குனி திருவிழாவின் 11ம் நாளான கடைசி நாளான இன்று மாலை 5 மணிக்கு பெருமாள் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி தாயார் சந்நிதி மண்டபம் சென்றடைகின்றனர். திருவாராதனம், அலங்காரம் கண்டருளிய பின்னர் பெருமாள் இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதிவலம் வந்து இரவு 10 மணிக்கு பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை ரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருவெள்ளறை கோயில் தக்கார் செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: