கோயம்பேட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு

அண்ணாநகர்: திடீர் மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில், கடந்த 14ம் தேதி  ஒரு கிலோ ஐஸ் மல்லி, காட்டுமல்லி, மல்லி, ஜாதிமல்லி, முல்லை ₹300க்கும், கனகாம்பரம் ₹400க்கும், அரளி பூ ₹150க்கும், சாமந்தி ₹80க்கும், சம்பங்கி ₹40க்கும், பன்னீர் ரோஸ் ₹70க்கும், சாக்லேட் ரோஸ் ₹60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருவதால், அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.  கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லி, காட்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி கனகாம்பரம் ₹200க்கும், ஐஸ் மல்லி ₹150க்கும், அரளி பூ ₹50க்கும், சாமந்தி ₹40க்கும், சாக்லெட் ரோஸ் ₹20க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘திடீர் மழை காரணமாக அனைத்து பூக்களின் விலையும் சரிந்துள்ளது. நாளை அமாவாசை என்பதால் பூக்களின் விலை கூடும்,’’ என தெரிவித்தார். சென்னை புறநகர் சில்லரை பூ வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 5 நாட்களாக அனைத்து பூக்களின் விலை குறைந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. ₹300க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி நேற்று ₹200க்கும் ₹400க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ₹200க்கும், அரளி பூ ₹150லிருந்து ₹50க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் மகிழ்ச்சி,’’ என்றார்.

Related Stories: