செய்யாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்

செய்யாறு: செய்யாற்றைவென்றான் கிராமத்தில், செய்யாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கதினர் கோரிக்கை விடுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் தடுப்பணை கட்டினால் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகள் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் தொடர்ச்சியாக செயல்படுத்த முடியும் என பல்வேறு கூட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம் ₹26 கோடியே 5 லட்சம் மதிப்பில் செய்யாற்றில் தடுப்பணை கட்ட திட்ட முன்வரைவு தயாரித்து அரசின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் இதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு தடுப்பணை கட்ட முன்வர வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், செய்யாற்றில் இருந்து பிரிந்து செல்லும் காழியூரான் கால்வாய், அனக்காவூரான் கால்வாய் ஆகியன மூலம் நீர் பிரித்து அனுப்பப்பட்டு, பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய ஏதுவாக அமையும். ஆண்டுதோறும் பெய்யும் மழை செய்யாற்றில் இருந்து வீணாக கடலில் கலப்பது தவிர்க்கப்படும் என தெரிவித்தனர்.

 

Related Stories: