காட்பாடி வழியாக ஆந்திரா- கேரளா செல்லும் ரயிலில் கடத்திய 2.7 கிலோ தங்கம், ₹35.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

* கோவையை சேர்ந்தவரிடம் விசாரணை

* சென்னை ரயில்வே குற்றப்பிரிவு அதிரடி

வேலூர், மார்ச் 18: காட்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 2.7 கிலோ தங்கம் மற்றும் ₹35.50 லட்சம் ஹவாலா பணம், சென்னை ரயில்வே குற்றப்பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்தவரிடம் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக செல்லும் ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக, சென்னை ரயில்வே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை ரயில்வே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் காட்பாடி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் ேநற்று அதிகாலை வரை தீவிர சோதனை நடத்தினர்.

இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். ரயில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் காட்பாடி வந்தபோது, முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ஒருவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது பையை சோதனை செய்தனர். அப்போது தங்க கட்டிகள், கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ஹவாலா பணம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ₹1.66 கோடி மதிப்பிலான 2.7 கிலோ தங்கம், ₹33.50 லட்சம் ஹவாலா பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ரயில்வே குற்றப்பிரிவு போலீசார், அவைகளை கடத்தி வந்த கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த அனந்தநாராயணன் என்கிற மணிகண்டன்(56), என்பவரையும் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ நாகராஜனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று ஒப்படைத்தனர். தொடர்ந்து அனந்தநாராயணன் என்கிற மணிகண்டனிடம் காட்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் தங்க கட்டிகள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியிலும், காட்பாடி ரயில் நிலையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: